Wednesday 15th of January 2025 05:45:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
சிம்மாசனம் ஏற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் - நா.யோகேந்திரநாதன்

சிம்மாசனம் ஏற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் - நா.யோகேந்திரநாதன்


1979ம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் நிறைவேற்றப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை இச்சட்டத்தின் அடிப்படையில் காரணமின்றிக் கைது செய்தல், காலவரையின்றித் தடுத்து வைத்தல், சித்திரவதைகள் மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களையே கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தித் தண்டனை வழங்கல், படையினரால் கொல்லப்படுபவர்களை மரண விசாரணையின்றிப் புதைத்தல் அல்லது எரித்தல், காணாமற் போகச் செய்தல், கைது செய்யப்படுபவர்களைக் கொன்று புதைத்தல், போதிய சாட்சியங்கள் இல்லாவிடினும் நீண்ட காலம் அரசியல் கைதிகளாகச் சிறையில் தடுத்து வைத்திருத்தல் போன்ற அநீதிகள் இன்று வரைத் தமிழ் மக்கள் மீது தொடரப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பல நூறு முஸ்லிம்களின் மீது இச்சட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் தடுத்து வைக்கப்பட்டனர்.

தற்சமயம் கோத்தா கோ கம போராட்டக்காரர்கள் மீதும் இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் லசந்த முதலிகே, கல்வேவ ஸ்ரீ தம்மதேரர், மாணவர் ஒன்றியத் தலைவர் ஹசந்த ஜெயவந்த குணதிலக்க ஆகிய மூவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்களை் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிவதற்காகவே இவர்கள் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் விடுதலைப் புலிகளை ஒழிக்கவெனக் கொண்டு வரப்பட்ட இச்சட்டம், முஸ்லிம்கள் மீதான அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்பட்டுத் தற்சமயம் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சலான சிங்கள இளைஞர்கள் மீதும் ஏவி விடப்பட்டது.

19.07.78 அன்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து 13.12.78க்கு முன்பு விடுதலைப் புலிகளை அழிப்பதற்கென சகல அதிகாரங்களும், வளங்களும் வழங்கப்பட்டுப் பிரிகேடியர் வீரதுங்க என்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இக்கால எல்லையில் ஏராளமான அப்பாவித் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதும், கொல்லப்பட்டதும், காணாமற்போகச் செய்யப்பட்டதும் நடந்தேறியது உண்மை. ஆனால் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை நிறுத்த முடியவில்லை. மாறாக அவர்கள் வேகமாக வளர்ந்து விடுதலைப் பிரதேசங்களைக் கொண்டிருக்குமளவுக்கு தரைப்படை, கடற்படை, விமானப் படை, புலனாய்வுப் படை என இராணுவ ரீதியில் வலிமை பெற்றும் ஒரு நீண்ட உள்நாட்டுப் போரை முன்னெடுக்குமளவுக்கும் சக்தி பெற்றவர்களாக மாறினர்.

தற்சமயம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தந்தையான ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் மருமகனும் அரசியல் வாரிசுமான ரணில் விக்கிரமசிங்க அதைக் கையில் எடுத்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட மூவர் மீதும் சுமத்தப்படும் குற்றங்கள் அச்சட்டத்துக்கு உட்படாதவை எனச் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் செய்ததுடன் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இச் சட்டம் ஜனநாயக விதிகளை மீறுகிறதெனக் கண்டனம் செய்துள்ளார். அமெரிக்கத் தூதுவர் யூலி சங், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, நோர்வே தூதுவர், கனடியத் தூதுவர் முதலியோரும் இச்சட்டத்தை ஏற்கமுடியாதெனவும் இது ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை மீறுகின்றது எனக் குற்றம் சாட்டியதுடன், உடனடியாக மூவரையும் விடுவித்து சாதாரண சட்டங்களின் கீழ் விசாரணை செய்யும்படியும் கேட்டுள்ளனர்.

பலம் வாய்ந்த சர்வதேச நாடுகளும், மனித உரிமை நிறுவனங்களும் இச்சட்டத்தை எதிர்த்துத் தங்கள் அழுத்தங்களை வெளியிட்டபோதும், அவை எவற்றையும் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இத்தடையுத்தரவுக்குக் கையெடுத்திட்டுள்ளார்.

இவ்வாறான சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப் பெற்று அதற்குப் பதிலாகத் தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றொரு சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் இது சர்வதேசத்தைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு கண்துடைப்பெனவும், இச்சட்டமும் பயங்கரவாதச் சட்டம் போன்றோ அல்லது அதைவிட மோசமானதாகவோ அமையமெனவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதை நியாயமற்றதென மறுத்துவிட முடியாது.

போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்பும் நாட்டில் அவசர காலச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் அதை நீக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட பல நாடுகள் அழுத்தங்களை மேற்கொண்டன. அந்த நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. ஆனால் அவசர காலச் சட்டத்திலுள்ள நீதி்மன்றத்தின் அனுமதியின்றிப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுடன் காலவரையறையின்றித் தடுத்து வைப்பது, கைது செய்யப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்தல் போன்ற அவசரகாலச் சட்ட விதிகளை பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குள் புகுத்தப்பட்டு 31.11.2011 தொடக்கம் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட 31/1 தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கியது அதன் அடிப்படையில் நல்லெண்ண ஆட்சி நான்கரை வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் அதை நிறைவேற்றவில்லை. அதற்குப் பதிலாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்றொரு சட்டத்தைக் கொண்டுவரப் போவதாகக் கூறியபோதும் அதையும் நிறைவேற்றவில்லை.

அதாவது இலங்கையின் ஆட்சியாளர்கள் சட்டத்தின் பெயர்களை மாற்றிக் கொண்டாலும் அவற்றின் மனித குல விரோத ஒடுக்குமுறை விதிகளைக் கைவிடப் போவதில்லை. ஏனெனில் அவர்களின் மக்கள் விரோத ஆட்சியைத் தொடர இவ்வொடுக்குமுறைச் சட்டங்கள் அவர்களுக்கு அவசியமான தேவையாகிறன.

அரகலய போராட்டம் பஷில் ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், கோத்தபாய ராஜபக்ஷ் முதலியோரை அவர்கள் வகித்த உயர் அதிகாரம் கொண்ட பதவிகளை விட்டு விரட்டியதுடன் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பனவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் சில நாட்கள் வைத்திருக்குமளவுக்கு சக்தி வாய்ந்ததாக அமைந்திருந்தது. அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, விலையுயர்வு பல மடங்காக அதிகரித்தமை போன்ற காரணங்களே போராட்டப் பேரேழுச்சிக்குக் காரணமாகும்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்பு பொருட்களின் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வரிசைகள் இல்லாமற் போய்விட்டது போன்று ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு விட்டாலும் மண்ணெண்ணெய் தொட்டு முட்டை வரை விலைகள் பன்மடங்காக உயர்ந்து விட்டன. அதன் காரணமாக கடல் உணவு, விவசாய உற்பத்திகள் என்பவற்றின் விலைகள் பல மடங்கு அதிகரிப்பது தவிர்க்க முடியாது. இன்னும் பல முக்கிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதைத் தவிரக்க முடியாத பண வீக்கம் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் லெபனான், சிம்பாப்வே, வெனிசூலா, துருக்கி என்பனவற்றுக்கு அடுத்ததாக இலங்கை உலகிலேயே ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனவே பொருட்களின் விலைகள் தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்லும். ஆனால் மக்களின் வருமானம் அதிகரிக்க எவ்வித மார்க்கமும் இல்லை.

எனவே மீண்டும் “அரகலய” போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

எனவே இன்றைய ஜனாதிபதியும் அரசாங்கமும் நிலைத்து நிற்க சகல விதமான போராட்டங்களும் முளையிலேயே அழிக்கப்படவேண்டும். அதற்குப் பலமான ஆயுதப்படை உண்டு. அதேவேளையில் அவர்களை வழிநடத்தவும் அவர்களின் கொடிய ஒடுக்கு முறைகளைச் சட்டப்படி நியாயப்படுத்தவும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற ஜனநாயக விரோதச் சட்டங்கள் தேவை.

எனவேதான் அதன் ஆரம்ப நடவடிக்கையாக வசந்த முதலிகே, கலவெல ஸ்ரீதம்பதேரர், ஹசந்த ஜெயந்த குணதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தனி முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். இவர்களுடன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ஆசிரியர் சங்கச் செயலாளர் யோசேப் ஸ்டாலின், கொக்கட்டுவ மகாநாயக்க தேரர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடப்பட்டுள்ளனர். மேலும் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் போன்றவற்றில் அனுமதியின்றி உட்புகுந்தனர், பெல்தோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்தனர், ரூபவாஹினிக்குள் உட்புகுந்தனர் போன்ற குற்றச்சாட்டுகளில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலர் தேடப்பட்டும் வருகின்றனர். இதில் நீதிமன்றத்தால் பிணையில் விடப்பட்டவர்களும் கண்ணுக்குத் தெரியாத விலங்குகளால். முடக்கப்பட்டவர்கள் என்பதை மறந்து விடமுடியாது.

இவ்வாறு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள், பங்கு கொண்டவர்கள், அநீதிகளைத் தாங்க முடியாமல் கிளர்ந்தெழுந்தவர்கள் எனப் பலரும் வேட்டையாடப்படுகின்றனர்.

இவர்களில் மூவர் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டும், பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டும், இன்னும் பலர் பிணையில் விடப்பட்டும், ஒருவித கண்காணிப்புக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் தொழிற்சங்கவாதிகளும் தப்பவிடப்பட வில்லை.

அதேவேளையில் இவர்கள் மீது பாய பயங்கரவாதத் தடைச் சட்டம் தயார் நிலையில் உள்ளது.

இனிமேல் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடிக்க முயாதவாறு ஒரு பயங்கரவலை பின்னப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தயார் நிலையில் உள்ளவரை இந்த வலை மிகப் பலமானதாகவே அமைந்திருக்கும்.

எனவே சிம்மாசனமேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழிறக்கப்படப் போவதில்லை. அப்படி இறக்கப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏற்றப்பட்டாலும் அதுவும் இதைவிட மோசமானதாகவே அமையும்.

அதாவது இன்று விலைவாசி உயர்வு உட்பட ஏனைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் கிளர்ந்தெழாமல் தடுப்பதற்கான ஆயுதமாகவே இந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே அடிப்படை உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யேகேந்திரநாதன்

29.08.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE